CINEMA
அம்பேத்கர் சிலையை பரிசளித்து மகிழ்ந்த உதயநிதி.. நெகிழ்ச்சியில் கமல்ஹாசன்
“நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை பாராட்டும் விதமாக கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து பாராட்டி உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. இத்திரைப்படம் பாலிவுட்டில் வெளியான “ஆர்ட்டிக்கள் 15” திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
மூன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதில் இருவர் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய படி கண்டெடுக்கப்படுகிறார்கள். மற்றொரு பெண்ணை காணவில்லை. அப்பெண் எங்கே? குற்றவாளிகளை கண்டுபிடிப்பாரா விஜய ராஜவன் ஐபிஎஸ் (உதயநிதி) என்பதே இத்திரைப்படத்தின் கதை.
இப்படிப்பட்ட துணிச்சலான கதையை தேர்ந்தெடுத்து நடித்த உதயநிதி ஸ்டாலினை பலரும் பாராட்டி வந்தனர். ரசிகர்களும் இத்திரைப்படத்தை ஏற்றுக்கொண்டு நல் வரவேற்பு கொடுத்தனர். இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கமல் ஹாசன் “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை கண்டுள்ளார். அதனை தொடர்ந்து “நெஞ்சுக்கு நீதி” படக்குழுவை அழைத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அப்போது உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளை பரிசாக வழங்கியுள்ளார்.
கமல்ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. கமல்ஹாசன் திரைப்பயணத்திலேயே “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்துள்ளது.
“விக்ரம்” திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். “உதயநிதி நன்றாக தொழில் தெரிந்தவர்” என கமல்ஹாசனே “விக்ரம்” டிரைலர் வெளியீட்டு விழாவில் பாராட்டி உள்ளார். இதனை தொடர்ந்து தற்போது கமல் ஹாசன் உதயநிதியை அழைத்து பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
