CINEMA
“எனக்கு எழுத படிக்க தெரியாது;” கமல்ஹாசன் ஓபன் டாக்..
தனக்கு எத்தனை மொழிகள் எழுத படிக்க தெரியாது என்பதை கமல் ஹாசன் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.
கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் உருவாகிய “விக்ரம்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பத்தல” பத்தல”, “போர் கொண்ட சிங்கம்”, “Wasted” ஆகிய பாடல்களின் lyric வீடியோக்களும் வெளிவந்துன.
“விக்ரம்” திரைப்படத்தின் புரோமோஷன் வேலைகள் தீயாக நடந்து கொண்டிருக்கின்றன. கமல் ஹாசன் இந்தியாவின் பல ஊர்களுக்கு சென்றும் பல நாடுகளுக்கு சென்றும் படத்தை புரோமோட் செய்து வருகிறார். சமீபத்தில் கூட மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புரோமோஷனுக்காக சென்று வந்தார்.
இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடிகர் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதில் அவர் பல சுவாரஸியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ஒரு சிறுமியுடன் கலகலப்பாக கோவை பாஷையில் பேசிய வீடியோ கூட இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பிரியங்கா தங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என கேட்டார். அதற்கு பதில் அளித்த கமல் “எனக்கு தெலுங்கு எழுதப்படிக்க தெரியாது, ஹிந்தி எழுத படிக்க தெரியாது, பெங்காலியும் எழுத படிக்கத் தெரியாது, கன்னடமும் எழுத படிக்க தெரியாது, மலையாளமும் எழுத படிக்கத் தெரியாது” என கூறினார்.
மேலும் அவர் தொடர்ந்து “ஆனால் இந்த பாஷைகள் எல்லாம் எனக்கு பேசத் தெரியும்” என கூறிவிட்டு ஒரு தெலுங்கு புரட்சி கவிதையை அப்படியே கூறினார். அப்போது நிகழ்ச்சியில் அமர்ந்திருந்தவர்களின் கரகோஷங்கள் வானை பிளந்தன.