CINEMA
“இளையராஜா சாம்ராஜ்ஜியத்தில் புயலாக வந்த ரஹ்மான்”.. ஜேம்ஸ் வசந்தனின் ஃபேஸ்புக் பதிவால் எழுந்த சர்ச்சை
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இளையராஜாவையும் ஏ ஆர் ரகுமானையும் ஒப்பிட்டு பேசியது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் “சுப்ரமணியபுரம்”, “பசங்க”, “நாணயம்” “ஈசன்” என பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளுக்கும் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.
இவர் பல டிவி ஷோக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஒரு வார்த்தை ஒரு லட்சம்” என்ற நிகழ்ச்சியை கூறலாம்.
இந்நிலையில் சமீபத்தில் ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஏ ஆர் ரகுமானை புகழ்ந்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் 60-ல் தொடங்கி இசை சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருந்த எம் எஸ் வியின் உச்ச காலத்தில் 76-ல் இளையராஜா உள்ளே நுழைந்தார் எனவும், இளையராஜா கோலோச்சிக் கொண்டிருந்த போது புயலாக ஏ ஆர் ரகுமான் நுழைந்து எல்லா முகங்களையும் பார்த்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களின் எண்ணத்தை தகர்த்தார் எனவும் கூறியிருந்தார்.
ஜேம்ஸ் வசந்தனின் இந்த ஃபேஸ்புக் பதிவால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் எம் எஸ் வியும் இளையராஜாவும் 16 ஆண்டுகள் தான் கோலோச்சினர். ஆனால் ஏ ஆர் ரகுமான் 30 ஆண்டுகள் கோலோச்சி வருகிறார் எனவும் அப்பதிவில் கூறியுள்ளார்.
இதனால் இளையராஜா ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர் பதிவிட்டிருந்த பதிவின் கமெண்ட் பகுதியில் “நீங்கள் இளையராஜாவை எப்போதும் வெறுப்பவர்” எனவும் “இந்த ஒப்பீடே தவறு” எனவும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
ஏ ஆர் ரகுமான் இசையமைத்த “பொன்னி நதி” பாடல் சமீபத்தில் வெளிவந்து 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஜேம்ஸ் வசந்தன் இந்த பதிவை பகிர்ந்துள்ளார்.