CINEMA
“ஜெய் பீம்” க்கு இரண்டு விருதுகள்…படக்குழுவினர் உற்சாகம்
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த “ஜெய் பீம்” திரைப்படத்திற்கு தேசிய அளவிலான இரண்டு விருதுகளை பெறவுள்ளன.
கடந்த 2021 ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் “ஜெய் பீம்”. இத்திரைப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஸா விஜயன், பிரகாஷ் ராஜ், எம். எஸ். பாஸ்கர், இளவரசு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ராஜாகண்ணுவாக நடித்திருந்த மணிகண்டன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அவர் போலீஸிடம் அடிவாங்கும் காட்சிகள் அனைத்தும் படம் பார்த்தவர்களையும் கண்ணீர் சிந்த வைத்தது. சூர்யா வக்கீலாக சிறப்பாக நடித்திருந்தார் . இத்திரைப்படம் வெகுஜன மக்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் இத்திரைப்படம் பல சர்ச்சைகளையும் உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது. எனினும் இருளர் சமூக மக்களின் வாழ்வையும் அவர்களின் துயரத்தையும் யதார்த்தமாக இத்திரைப்படம் காட்சிப்படுத்தியது.
அதிகார வர்க்கத்தின் மூலம் நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்கும் வகையிலான கதையம்சம் ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தியது. மேலும் இத்திரைப்படத்தை பல அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டினர்.
இத்திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இத்திரைப்படம் நொய்டா உலக திரைப்பட விழாவிலும், பூனே உலக திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
இத்திரைப்படம் வெளியான போது இந்தியா முழுவதும் இத்திரைப்படம் பேச்சுப் பொருளானது. பெருவாரியான மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை பெறவுள்ளது. அதாவது சிறந்த திரைப்படத்திற்கான தாதா சாகேப் பால்கே விருதை பெறவுள்ளது. மேலும் ராஜாகண்ணுவாக நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெறவுள்ளார்.
