CINEMA
யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்.. ரசிகர்கள் பெருமிதம்
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு இங்கு வேற லெவல் ரசிகர் கூட்டம் உண்டு. அவரது பாடல்களை உயிராக நினைப்பவர்கள் பலர். யுவனுக்காகவே திரையரங்கிற்கு சென்று அவர் இசையமைத்து படங்களை ரசித்து பார்ப்பவர்களும் பலர் உண்டு.
இவர் தமிழில் “அரவிந்தன்” என்ற திரைப்படம் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்போது யுவனுக்கு வயது 17 தான். சிறு வயதிலேயே ஹிட் பாடல்கள் கொடுத்து அசரவைத்த யுவன் ஷங்கர் ராஜா அதன் பின் தொட்டதெல்லாம் ஹிட் தான்.
குறிப்பாக செல்வராகவன்-யுவன் ஷங்கர் ராஜா காம்போவை 90ஸ் கிட்ஸ்களில் யாராலும் மறந்திருக்க முடியாது. “காதல் கொண்டேன்”, “7ஜி ரெயின்போ காலணி’, “புதுப்பேட்டை” போன்ற திரைப்படங்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் ஆல்பம் வேற லெவலில் ரீச் ஆனது.
இதனை தொடர்ந்து செல்வராகவனுடன் “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்தார். அதனை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கிய “நானே வருவேன்” திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
அதே போல் யுவன் ஷங்கர் ராஜாவும் மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரும் இணைந்தால் சொல்லவே தேவை இல்லை. அவர்கள் இருவரின் காம்போவில் வெளிவந்த பாடல்கள் காலத்திற்கும் பேசப்படுபவை.
யுவன் ஷங்கர் ராஜா அஜித், விஜய், சிம்பு, தனுஷ் என தமிழின் முன்னணி கதாநாயகர்கள் பலருக்கும் பல ஹிட் ஆல்பம்களை தாறுமாறாக தந்துள்ளார். “பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி, சின்ன ஹீரோவாக இருந்தாலும் சரி, யுவன் ஷங்கர் ராஜாவிற்கு எந்த பாகுபாடும் கிடையாது” என அவரது ரசிகர்கள் கூறுவது உண்டு.
இந்த நிலையில் தற்போது சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இந்த செய்தி யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.