CINEMA
“எனது உயிரின் உயிரே பிரிந்தது”.. ஹாரீஸ் ஜெயராஜ் உருக்கம்..
“எனது உயிரின் உயிரே பிரிந்தது” என இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் உருக்கமான பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பிண்ணனி பாடகர் கே கே என்ற கிருஷ்ணகுமார் குன்னத் நேற்று கொல்கத்தாவின் ஒரு கல்லூரி அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அதன் பின் மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லும் வழியில் துர்திஷ்டவசமாக உயிரிழந்தார்.
மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது நெஞ்சு வலி வந்ததாக கூறப்படுகிறது. அரங்கத்தில் கூட்டம் அதிகமானதாகவும் அங்கே குளிரூட்டும் சாதனம் சரியாக வேலை செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது. இவருக்கு வயது 53.
இந்திய சினிமாவின் மிக பிரபலமான பாடகர் கே கே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி என பல மொழி திரைப்பட பாடல்களில் பிண்ணனி பாடியுள்ளார்.
இந்நிலையில் தமிழின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரீஸ் ஜெயராஜ் தனது சமூக வலைத்தளத்தில் மனம் உடைந்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “எனது ‘உயிரின் உயிரே’ பிரிந்தது. அவரது கடைசி பாடலான “கொஞ்சி கொஞ்சி” பாடலை நாம் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு அதிர்ச்சி தரும் செய்தி வெளிவந்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய பாடலை இந்த இசையுலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்” என உருக்கமான பதிவு ஒன்றை அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் “காக்க காக்க” திரைப்படத்தில் இடம்பெற்ற “உயிரின் உயிரே” பாடலை கே கே தான் பாடினார். மேலும் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் வெளிவந்த “அந்நியன்” “12B” என பல ஹிட் ஆல்பம்களிலும் கே கே பாடியுள்ளார். கே கே பாடிய கடைசி பாடலான “தி லெஜண்ட்” திரைப்படத்தில் இடம்பெற்ற “கொஞ்சி கொஞ்சி” பாடலுக்கும் ஹாரீஸ் ஜெயராஜ் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
