CINEMA
“நட்சத்திரங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன”.. தொடங்கியது துருவ நட்சத்திரம்..
“துருவ நட்சத்திரம்” திரைப்படம் மீண்டும் தொடங்கியுள்ளதாக கௌதம் மேனன், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் “துருவ நட்சத்திரம்”. இத்திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ரீத்து வர்மா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்ய தர்ஷினி என பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முக்கால் வாசி முடிந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நின்றது. விக்ரமிற்கும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்றதாக பேசப்பட்டது.
ரசிகர்கள் இத்திரைப்படம் எப்போது வெளிவரும் என காத்திருந்தனர். இந்நிலையில் அந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கௌதம் வாசுதேவ் மேனன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் கௌதம் வாசுதேவ் மேனனும் விக்ரமும் இணைந்து தென்படுகின்றனர். அந்த புகைப்படங்களை பகிர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன் அதில் “நட்சத்திரங்கள் இணைந்தது” என குறிப்பிட்டுள்ளார். இதனை கொண்டு மீண்டும் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக அறியப்படுகிறது.
“துருவ நட்சத்திரம்” திரைப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா, ஜோமோன் டி ஜோன் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இத்திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனனுடன் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா ஆகியோர் தயாரித்துள்ளனர். விரைவில் இத்திரைப்படம் குறித்தான அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் சிம்புவை வைத்து இயக்கிய “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram