CINEMA
அருள்மொழி வர்மன் இல்லையாம்.. அருண்மொழி வர்மன் தானாம்..
மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் அருண்மொழி வர்மன் கதாப்பாத்திரம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் படக்குழுவினர்.
தமிழ்நாட்டில் எழுதப்பட்ட முக்கிய வரலாற்று நாவல்களில் மிகவும் போற்றப்படும் நாவல் “பொன்னியின் செல்வன்”. இந்த நாவலை எழுதியவர் கல்கி. இந்த நாவல் 1950 ஆம் ஆண்டில் இருந்து 1954 ஆம் ஆண்டு வரை “கல்கி” என்ற வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.
சோழர் வரலாற்றில் ராஜ ராஜ சோழனின் அண்ணனான ஆதித்ய கரிகாலனின் கொலையை கையமாக வைத்து இந்நாவல் புனையப்பட்டுள்ளது. இந்த நாவல் வெளிவந்து இத்தனை வருடங்கள் ஆகியும் தமிழ் வாசகர்களின் முன்னணி வரலாற்று நாவலாக திகழ்ந்து வருகிறது.
இந்த நாவலை திரைப்படமாக எடுக்க எம் ஜி ஆரில் இருந்து பல ஜாம்பவான்கள் முயன்றனர். ஆனால் எல்லாம் கைமீறிப்போனது. இந்நிலையில் மணி ரத்னம் மூலம் “பொன்னியின் செல்வன்” திரைப்படமாக வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படம் பேன் இந்திய திரைப்படமாக வெளிவருவதால் சோழர்கள் குறித்த விவாதம் தற்போது இந்திய அளவில் எழுந்துள்ளது.
இதனிடையே ஜெயம் ரவியின் கதாப்பாத்திரமான அருண்மொழி வர்மன் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளிவந்ததில் இருந்து ரசிகர்கள் இணையத்தில் “நாவலில் அருள்மொழி வர்மன் என்று தானே இருக்கிறது” என கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இந்த விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக படக்குழு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் வரலாற்று ஆய்வாளர் ஜெயக்குமார் என்பவர் “சோழர் காலத்தின் செப்பேடுகளை பார்த்த போது அருண்மொழி வர்மனாகத்தான் இருந்தது” என கூறியுள்ளார். இந்த வீடியோவால் ஒரு வழியாக இந்த விவாதத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது.
