CINEMA
மீண்டும் பாயந்தது வழக்கு.. சிக்கலில் ஜெய் பீம் இயக்குனர்..?
“ஜெய் பீம்” திரைப்படத்தின் இயக்குனர் தா செ ஞானவேல் மீது ராஜாகண்ணுவின் உறவினர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான “ஜெய் பீம்” திரைப்படம் உலகம் முழுவதும் பரவலாக பாராட்டைப் பெற்றது. இருளர் சமுதாயத்தின் மீது ஆதிக்க சக்திகள் செலுத்தும் வன்முறையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட “ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களால் பாரட்டப்பட்டது மட்டுமல்லாது சில சர்ச்சைகளையும் உண்டு செய்தது.
அதாவது திரைப்படத்தில் ஒரு காட்சியில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சில குறியீடுகள் இருப்பதாக அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் போர் கொடி தூக்கினர். அதன் பின் இந்த விவகாரம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலரால் வழக்கும் தொடுக்கப்பட்டது. நடிகர் சூர்யா, இயக்குனர் தா செ ஞானவேல் மற்றும் பிறர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என தீர்ப்பும் வந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தா செ ஞானவேல் மீது ஒரு வழக்கு பாய்ந்துள்ளது. ராஜாகண்ணு என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான் “ஜெய் பீம்” திரைப்படம். அந்த ராஜாகண்ணுவின் உறவினரான கொளஞ்சியப்பன் என்பவர் “எங்களின் வாழ்க்கையை எங்களது அனுமதி பெறாமல் திரைப்படமாக எடுத்திருக்கின்றனர். காப்புரிமை சட்டத்தின் கீழ் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது தா செ ஞானவேல் மற்றும் படக்குவினரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தா செ ஞானவேல் “ஜெய் பீம்” திரைப்படத்தை தொடர்ந்து தமிழகத்தையே உலுக்கிய ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.