CINEMA
“கோப்ரா” திரைப்படம் இனி 3 மணி நேரம் கிடையாது.. காட்சிகளை வெட்டித் தள்ளிய படக்குழு..
“கோப்ரா” திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை படக்குழு கட் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீயான் விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
“கோப்ரா” திரைப்படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, கே எஸ் ரவிக்குமார், இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, ஆனந்த் ராஜ், மியா ஜார்ஜ், ரோபோ ஷங்கர் ஆகிய பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
கணிதத்தில் புகுந்து விளையாடும் விக்ரம் பணத்திற்காக உலக பணக்காரர்கள் பலரை கொலை செய்கிறார். அதுவும் கணிதம் மூலம் புதுவிதமாக கொலை செய்கிறார். இந்த கொலைகளை யார் செய்கிறார் என கண்டுபிடிக்க இன்டர்போல் அதிகாரியாக இர்ஃபான் பதான் வருகிறார். ஒரு புறம் ஒரு ஹேக்கர் விக்ரமை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துவிடுகிறார். விக்ரம் எதற்காக இந்த கொலைகளை செய்கிறார்? அந்த ஹேக்கர் யார்? என்பது தான் “கோப்ரா” திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.
சீயான் விக்ரம் வெறித்தனமாக நடித்திருக்கிறார். குறிப்பாக கணிதம் மூலம் கொல்லும் காட்சிகளில் மாஸ் காட்டியுள்ளார். பல கெட் அப்களில் வரும் விக்ரம் அந்தந்த கெட் அப்பிற்கு ஏற்றவாறு நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஆனால் இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருகின்றன.
மேலும் இத்திரைப்படம் 3 மணி நேரம் என்பதாலும் தேவையில்லாத காட்சிகள் இடம்பெற்றுள்ளது என விமர்சனங்கள் எழுந்ததாலும் இத்திரைப்படத்தின் நீளத்தை படக்குழு குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது மொத்த திரைப்படத்தின் நீளத்தில் 20 நிமிடங்கள் கட் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
