CINEMA
விமான நிலையத்தில் மயக்கம் போட்டு விழுந்த பாரதிராஜா… மருத்துவமனையில் அனுமதி
இயக்குனர் பாரதிராஜா மயக்கம் போட்டு விழுந்ததின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் உடல் நிலை குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு விதை போட்டவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் இயக்கிய முதல் திரைப்படமான “16 வயதினிலே” மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதன் பின் “கல்லுக்குள் ஈரம்”, “மண் வாசனை”, “புது நெல்லு புது நாத்து”, “பசும்பொன்”, “கிழக்குச் சீமையிலே”, “கருத்தம்மா” என கிராமத்தை மையமாக வைத்து பல திரைப்படங்களை இயக்கினார்.
கிராமத்து ஸ்டைல் மட்டுமல்லாது “டிக் டிக் டிக்”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற த்ரில்லர் படங்களையும் இயக்கி வெற்றிகண்டார். பாரதிராஜா சிறந்த இயக்குனர் மட்டுமல்லாது சிறந்த நடிகரும் கூட. “ஆய்த எழுத்து”, “பாண்டிய நாடு” “ரெட்டை சுழி” போன்ற திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி. அடிக்கடி தன்னுடைய சொந்த ஊருக்கு பயணிக்கும் பாரதிராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு பயணிக்க திட்டமிட்டு சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் ஏறினார். இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் இறங்கியபோது அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து பாரதிராஜா அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது அவரது உடல் நலம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது பாரதிராஜாவிற்கு பயண களைப்பு ஏற்பட்டிருந்ததால் அவ்வாறு மயக்கம் வந்திருக்கிறது எனவும் தற்போது உடல் நலம் தேறி நலமாக இருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.