CINEMA
பல வருடங்கள் கழித்து பொங்கலுக்கு மோதும் அஜித்-விஜய் திரைப்படங்கள்..
போட்டி நடிகர்களான அஜித், விஜய் திரைப்படங்கள் பல வருடங்கள் கழித்து ஒரே நாளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய், அஜித் ஆகிய இருவரும் நண்பர்கள் என்றாலும் அவர்களின் திரைப்படங்களுக்கிடையே பெரிய அளவில் வணிகப் போட்டி உண்டு. அதுவும் இருவரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவந்தால் அவ்வளவுதான். திரையரங்குகள் திருவிழா கோலம் காணும். அவ்வப்போது இருவரின் ரசிகர்களின் இடையே தள்ளுமுள்ளும் ஏற்படும்.
இந்த நிலையில் அஜித்தின் “AK 61” திரைப்படமும் “வாரிசு” திரைப்படமும் ஒரே நாளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. “AK 61” திரைப்படத்தை வெளியிடும் தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“AK 61” திரைப்படத்தின் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என தெரிய வருகிறது. இத்திரைப்படத்தை வருகிற தீபாவளி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்தது. ஆனால் தற்போதைய நிலையை பார்க்கும்போது இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பே இல்லை என தோன்றுகிறது.
மறுபுறம் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவர உள்ளது.
பல வருடங்கள் கழித்து இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் மோதுகின்றன. ஆதலால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இருவரின் ரசிகர்களும் அண்ணன் தம்பிகள் போல் பழகி வந்தாலும் இணையத்தில் ஒருவர் மீது ஒருவர் வன்மத்தை கக்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதற்கு முன் இவர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான போது இருவரின் ரசிகர்களுக்குள்ளும் பல களேபரங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.