CINEMA
பொங்கலுக்கு மோதும் அஜித், விஜய்?? வேற லெவல் சம்பவம் இருக்கு..
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித், விஜய் திரைப்படங்கள் மோத உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், அஜித் ஆகிய இருவரும் நண்பர்கள் என்றாலும் அவர்களின் திரைப்படங்களுக்கிடையே பெரிய அளவில் வணிகப் போட்டி உண்டு. அதுவும் இருவரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவந்தால் அவ்வளவுதான். திரையரங்குகள் திருவிழா கோலம் காணும். அவ்வப்போது இருவரின் ரசிகர்களின் இடையே தள்ளுமுள்ளும் ஏற்படும்.
இந்த நிலையில் அஜித்தின் “AK 61” திரைப்படமும் “வாரிசு” திரைப்படமும் ஒரே நாளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. “AK 61” திரைப்படத்தின் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என தெரிய வருகிறது. இத்திரைப்படத்தை வருகிற தீபாவளி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்தது. ஆனால் தற்போதைய நிலையை பார்க்கும்போது இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பே இல்லை என தோன்றுகிறது.
மறுபுறம் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
“AK 61” திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். அஜித்- ஹெச் வினோத்- போனி கபூர் கூட்டணி “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் “AK 61” திரைப்படத்தில் இணைந்துள்ளது.
விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். எஸ் தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷ்யாம், பிரகாஷ் ராஜ், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். எஸ் ஜே சூர்யாவும் ஒரு ரோலில் நடிக்கிறார் என பேச்சுக்கள் எழுந்து வருகின்றது.