CINEMA
அஜித்துடன் மீண்டும் இணையும் ஐஸ்வர்யா ராய்.. செம தகவல்..
அஜித் திரைப்படத்தில் கதாநாயகியாக பல வருடங்கள் கழித்து மீண்டும் ஐஸ்வர்யா ராய் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2000 ஆம் ஆண்டு அஜித் குமார், ஐஸ்வர்யா ராய், மம்முட்டி, அப்பாஸ், தபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”. இத்திரைப்படத்தை ராஜீவ் மேனன் இயக்கியிருந்தார். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ஒரு சிறந்த காதல் திரைப்படமாக இன்றும் கொண்டாடப்படுகிறது இத்திரைப்படம். இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராய் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயும் அஜித்தும் ஜோடி சேரப்போகிறார்களாம்.
“AK 61” திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நயன்தாரா தான் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழு ஐஸ்வர்யா ராய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். ஒரு வேளை பேச்சுவார்த்தைக்கு ஐஸ்வர்யா ராய் ஒகே சொன்னால் அஜித்தும் ஐஸ்வர்யா ராயும் பல வருடங்கள் கழித்து மீண்டும் இணையும் திரைப்படமாக இது அமையும்.
“AK 61” திரைப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும் என கூறப்படுகிறது. மேலும் “AK 61” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
“AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய திரைப்படம் தொடங்கும் எனவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விக்னேஷ் சிவன் இயக்கும் “AK 62” திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.