CINEMA
ஷூட்டிங்கில் கீழே விழுந்து வலியால் கதறி துடித்த வெங்கட் பிரபு பட நடிகை.. மருத்துவமனையில் அனுமதி
படப்பிடிப்பின் போது கீழே விழுந்து வலியால் துடித்த சம்யுக்தா ஹெக்டேவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வளர்ந்து வரும் கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னடத்தில் “கிரிக் பார்ட்டி”, காலேஜ் குமார்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழில் “வாட்ச் மேன்”, “கோமாளி”, “பப்பி”, “தேள்”, “மன்மத லீலை” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது “கிரீம்” என்ற கன்னட திரைப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சம்யுக்தா ஹெக்டே முன்னணி கதாநாயகியாக நடிக்கிறார். ஒரு பக்கா ஆக்சன் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளை படமாக்கினர். அப்போது மிகவும் கடினமாக சண்டையிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் இயக்குனர் அபிஷேக் பசந்த் டூப் பயன்படுத்திக் கொள்ளலாம் என சம்யுக்தாவிடம் கூறியுள்ளார். ஆனால் சம்யுக்தா டூப் இல்லாமல் தானே நடிப்பதாக கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது சம்யுக்தா ஹெக்டே தனது காலை மேலே தூக்கி ஒருவரை எத்த போக அப்படியே காலை பிடித்துக் கொண்டு வலியில் கதறியபடி கீழே விழுந்தார். இதனை கண்ட படக்குழுவினர் அதிர்ச்சியடைந்து அவரை அணுகினர். வலியால் துடித்துக் கொண்டிருந்த சம்யுக்தா ஹெக்டேவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து சம்யுக்தா ஹெக்டே பேசிய போது “இது Ligament tear. மிகவும் பயங்கரமாக வலிக்கிறது” என கூறியுள்ளார். இச்சம்பவத்தால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. “கிரீம்” திரைப்படத்தின் இயக்குனருக்கு இத்திரைப்படம் அறிமுக திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சம்யுக்தா ஹெக்டே சிகிச்சை பெற்று ஓய்வில் உள்ளார்.