CINEMA
ஜெயிலர் படத்தில் இணைய உள்ள சென்னை 28 பட நடிகர்…
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் “சென்னை 28” திரைப்படத்தில் நடித்த முக்கிய நடிகர் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது. “பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
“பீஸ்ட்” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்த நிலையில் இதில் திரைக்கதையை சற்று மேம்படுத்த நெல்சனுடன் கே எஸ் ரவிக்குமார் இணைந்து பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த தகவல் குறித்த உண்மை தன்மை தெரியவில்லை.
“ஜெயிலர்” திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. மேலும் பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராய், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த்-ரம்யா கிருஷ்ணன் காம்போவை பற்றி நாம் கூறத்தேவையே இல்லை. “படையப்பா” திரைப்படத்தில் நீலாம்பரியாக வந்து மிரட்டிவிட்டு போனவர் ரம்யா கிருஷ்ணன். “படையப்பா” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் “ஜெயிலர்” திரைப்படத்தின் மூலம் ரஜினியுடன் இணைந்துள்ளார்.
அதே போல் யோகி பாபு தற்போது விஜய்யின் “வாரிசு” திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு முன் “தர்பார்” திரைப்படத்தில் யோகி பாபு ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்தில் ஒரு முக்கிய நடிகர் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது நடிகர் ஜெய் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
