CINEMA
விஜய் என்னோட தம்பி.. நெகிழ்ச்சியில் அமீர் கான்…
நடிகர் விஜய் எனது தம்பி என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் அமீர் கான். ஏன் தெரியுமா?
அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள “லால் சிங் சத்தா” திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற 11 ஆம் தேதி வெளிவருகிறது. ஹாலிவுட்டில் வெளியான “ஃபார்ரஸ்ட் கம்ப்” என்ற திரைப்படத்தின் தழுவலான இத்திரைப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.
அமீர் கான், கிரண் ராவ், ஜோதி தேஷ்பாண்டே, அஜித் அந்தேரே, ராதிகா சௌத்ரி ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.
இத்திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், அமீர் கான் ஆகியோர் பங்குபெற்றனர்.
இவ்விழாவை தொடர்ந்து பிரபல யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்த அமீர் கான் தென்னிந்திய நடிகர்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அப்போது அமீர் கான் “விஜய் ஒரு அற்புதமான நடிகர். அவரை பார்க்கும் போது என்னுடைய சகோதரர் போலவும் எனது குடும்ப உறுப்பினர் போலவும் உணர்கிறேன். ரஜினியை பார்க்கும்போதும் அப்படிப்பட்ட உணர்வே வருகிறது” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “அஜித்திடம் ஒரு சக்தி இருக்கிறது. அவருடைய பெர்சனாலிட்டி அப்படி” எனவும் கூறினார்.
சமீபத்தில் இத்திரைப்படத்தில் நடித்துள்ள நாக சைதன்யா ஒரு பேட்டியில் “லால் சிங் சத்தா திரைப்படத்தில் விஜய் சேதுபதி தான் முதலில் என்னுடைய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவருக்கு கால் ஷீட் பிரச்சனை இருந்தது. அதனால் தான் திரைப்படத்தில் இருந்து விலகினார். அதன் பின் தான் என்னை அழைத்தனர்” என கூறியது குறிப்பிடத்தக்கது.