CINEMA
“ஒன்றியத்தின் தப்பாலே”… என்ன தான் அர்த்தம்? குழப்பி எடுத்த கமல்..
“விக்ரம்” திரைப்படத்தின் சமீபத்திய பேட்டியில் “ஒன்றியத்தின் தப்பாலே” என்ற வார்த்தைக்க்கு கமல் அளித்த பதில் என்ன தெரியுமா?
கமல் ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் “விக்ரம்”. சமீபத்தில் இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா கூட பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதில் உதயநிதி ஸ்டாலின், லோகேஷ் கனகராஜ், அனிருத், ராதிகா சரத்குமார், விஜய் சேதுபதி, பா. ரஞ்சித் போன்ற பல முக்கிய பிரபலங்களும் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
“விக்ரம்” திரைப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் தற்போது தீயாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் சமீபத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றில் நிருபர் ஒருவர் பத்தல பத்தல பாடலில் இடம்பெற்ற “ஒன்றியத்தின் தப்பாலே” என்ற வரியை குறித்து கமல் ஹாசனிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த கமல் “தமிழ் தெரிந்தவர்களுக்கு ஒன்றியம் என்றால் என்ன என்று தெரியும். இப்போது பத்திரிக்கையாளர்கள் கூடியிருப்பது கூட ஒரு ஒன்றியம் தான். சினிமாவுக்கு சில யூனியன்கள் (ஒன்றியங்கள்) இருக்கிறது. அந்த யூனியனில் தப்பு நடந்துவிட்டது என்றால் படம் கெட்டுப் போகும்” என தன்னுடைய பாணியில் பதில் அளித்தார்
“ஒன்றியத்தின் தப்பாலே” என்ற வரிக்கு மத்திய அரசை குறிப்பதாக பலரும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் கமல்ஹாசன் தற்போது குழப்பமான பாணியில் பதில் சொல்லியுள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் மற்றொரு நிருபர் “ஜூன் 3 அன்று கலைஞர் கருணாநிதி பிறந்த நாள். ஆதலால் திட்டமிட்டு விக்ரம் திரைப்படத்தை ஜூன் 3 அன்று வெளியிடுகிறீர்களா?” என கேட்டார்.
அதற்கு பதில் அளித்த கமல் “இல்லை, அப்படி திட்டமிடவில்லை, ஒரிஜினல் விக்ரம் (1986) திரைப்படம் மே 29 ஆம் தேதி வெளியானது. அதே போல் இத்திரைப்படத்தையும் அதே தேதியில் வெளியிட திட்டமிட்டோம். ஆனால் தள்ளிப் போய் விட்டது, அவ்வளவுதான்” என பதில் அளித்தார்.
