CINEMA
ஷாருக் கான் திரைப்படத்தில் கேமியோ ரோலில் விஜய்.. மாஸ் அப்டேட்
ஷாருக் கான் நடித்து வரும் திரைப்படத்தில் கேமியோ ரோல் ஒன்றில் விஜய் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “ஜவான்”. இத்திரைப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் யோகி பாபு, விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல் வந்தது.
“ஜவான்” திரைப்படத்திற்கு அட்லி இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் சார்பாக ஷாருக் கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி வெளிவருகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் விஜய் ஒரு கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். “ஜவான்” படப்பிடிப்பு குழுவினர் சென்னைக்கு வர உள்ளதாக செய்திகள் வருகின்றன. மேலும் விஜய் தற்போது நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
ஓரு வேளை விஜய்யின் கேமியோ ரோலுக்காகத் தான் “ஜவான்” திரைப்படக் குழு சென்னைக்கு வருகிறார்களோ? என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் விஜய் ஷாருக் கான் திரைப்படத்தில் நடிப்பது உறுதி என கூறப்படுகிறது.
விஜய் தென்னிந்தியாவின் மாஸ் நடிகர். இவரும் வட இந்திய பாட்ஷா ஷாருக் கானும் இணைந்தால் அமளி துமளியாக இருக்குமே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
விஜய் இதற்கு முன் பாலிவுட்டில் பிரபு தேவா இயக்கத்தில் அக்சய் குமார் நடித்த “ரவுடி ரத்தோர்” திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இதனை தொடர்ந்து தற்போது ஷாருக் கானுடன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என வெளிவரும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
