CINEMA
சீயான் விக்ரம்-பா ரஞ்சித் பட பூஜை தொடங்கியது..
பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் “சீயான் 61” திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.
பா. ரஞ்சித் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது “நட்சத்திரம் நகர்கிறது” என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துசாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன் ஆகிய பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதனை காணும்போது காதலின் பல பரிணாமங்களை காட்டுவது போன்ற திரைப்படமாக அமையும் என தெரிய வருகிறது. “Love is political” என்ற வாசகத்தோடு இத்திரைப்படத்தின் போஸ்டர் வெளிவந்ததால் இது காதலும் ஒரு அரசியல் தான் என்பதை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படமாக இருக்கலாம் என வியூகிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து பா. ரஞ்சித் சீயான் விக்ரமின் 61 ஆவது திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. இந்நிலையில் இன்று இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
விக்ரமின் 61 ஆவது திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா. ரஞ்சித் இணைந்து தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்தை குறித்த சுவாரசியமான தகவல்களும் வெளிவந்துள்ளது. அதாவது பா. ரஞ்சித் இத்திரைப்படத்தை 3D தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயக்க உள்ளாராம். மேலும் இத்திரைப்படம் 18 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் மிக பிரம்மாண்டமான கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக உள்ளதாம். ஆதலால் அதிகளவில் பட்ஜெட் ஒதுக்கப்பட உள்ளதாம்.
மேலும் அதன் பின் கமல் ஹாசனை வைத்து பா. ரஞ்சித் ஒரு திரைப்படம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பா. ரஞ்சித், “கமல் ஹாசனை வைத்து நிச்சயம் ஒரு படம் இயக்குவேன்” என கூறினார். ஆதலால் ரசிகர்கள் கமல்-ரஞ்சித் கூட்டணிக்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.