CINEMA
“இரவின் நிழல்” படத்திற்கு தடை விதிக்க வேண்டும்?? நீதிமன்றத்தில் வழக்கு
“இரவின் நிழல்” திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
பார்த்திபன் இயக்கத்தில் உருவான “இரவின் நிழல்” திரைப்படம் வருகிற 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் பார்த்திபன், ரோபோ ஷங்கர், வரலட்சுமி சரத்குமார், பிரிகிடா ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் உலகின் முதல் Non Linear Single Shot திரைப்படமாக உருவாகி உள்ளது. “இரவின் நிழல்” திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் “இரவின் நிழல்” திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதாவது “இரவின் நிழல்” திரைப்படத்திற்காக பார்த்திபன் நவீன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் குறைந்த வாடகையில் ஒளிப்பதிவு சாதனங்களை வாங்கினார் எனவும் ஆனால் அதற்கான வாடகை பாக்கி இருப்பதாகவும் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
மேலும் ரூ. 25 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தாமல் இரவின் நிழல் திரைப்படத்தை வெளியிடக் கூடாது எனவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம், பார்த்திபன் மற்றும் அகிரா நிறுவனத்தின் இயக்குனர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா ஆகியோர் வருகிற 12 ஆம் தேதி இது குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
பார்த்திபன் “இரவின் நிழல்” திரைப்படத்திற்காக தீயாக புரோமோஷன் வேலைகளில் இறங்கி உள்ளார். இத்திரைப்படம் குறித்து அதிகம் பேட்டி காண்கிறார். சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புரோமோஷனுக்காக கலந்து கொண்டார் பார்த்திபன். இந்நிலையில் தற்போது “இரவின் நிழல்” திரைப்படத்திற்கு இந்த பிரச்சனை எழுந்துள்ளது.
