CINEMA
“தியேட்டருக்கு நிஜ யானையே வரும்”… பகீர் கிளப்பிய சிங்கம் பட இயக்குனர்
தியேட்டருக்கு நிஜ யானையே வரும் என சமீபத்திய பேட்டியில் இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான “யானை” திரைப்படம் ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் “யானை” திரைப்படத்தின் விநியோகஸ்தர்கள் “விக்ரம்” திரைப்படம் அமோக வெற்றிப் பெற்றுள்ளதால் திரையரங்குகள் அதிகம் ஒதுக்க முடியாது எனவும் ஆதலால் “யானை” திரைப்படத்தை ஜூலை மாதம் 1 ஆம் தேதி வெளியிட முடிவு எடுக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளரிடம் ஆலோசனை நடத்தினர்.
அதன் படி “யானை” திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 1 ஆம் தேதி வெளிவருகிறது. இதற்கான புரோமோஷன் வேலைகள் தீயாக நடைபெற்று வருகின்றன.
இதன் அடுத்த படியாக ஒவ்வொரு ஊர்களுக்கு ஒரு நான்கு சக்கர கனரக வாகனத்தை அனுப்பி அதில் பெரிய தொலைக்காட்சியில் யானை திரைப்படத்தை குறித்து புரோமோட் செய்வதற்காக திட்டமிடப்பட்டது. அந்த வகையில் இரண்டு வாகனங்களை ஹரி, மற்றும் அருண் விஜய் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் பேட்டி கொடுத்தனர். அதில் “இது போன்ற வித்தியாசமான புரோமோஷன் யுக்திகளை தாங்கள் இதற்கு முந்திய திரைப்படங்களில் கையாளவில்லையே” என ஒரு நிருபர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஹரி “கொரோனாவுக்கு பின் இங்கே சினிமா சம்பந்தப்பட்ட அனைத்தும் மாற்றத்தை கண்டுள்ளது. ஆதலால் காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றம் வேண்டும் என்பதற்காகத் தான் இந்த புரோமோஷன்” என கூறினார்.
அதன் பின் ஒரு நிருபர் “நீங்கள் ஒரிஜினல் யானையை திரையரங்குகளில் நிற்க வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஹரி “கடலூரில் ஒரு திரையரங்கு உரிமையாளர் என்னிடம் சொன்னார். படம் வெளியாகும்போது சில நாட்களுக்கு அங்கே ஒரு நிஜ யானையை நிப்பாட்ட உள்ளோம் என” என்று பதிலளித்தார்.
“யானை” திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, அம்மு அபிராமி, யோகி பாபு, ராதிகா சரத்குமார், குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.