CINEMA
“விக்ரம்” திரைப்படத்தால் தள்ளிப் போகும் “யானை”…?
“விக்ரம்” திரைப்படத்தின் அமோக வெற்றியால் அருண் விஜய்யின் “யானை” வெளியீட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“விக்ரம்” திரைப்படம் அமோக வெற்றியை பெற்றுள்ளதால் திரையரங்கங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில திரையரங்குகளில் 24 மணி நேரமும் “விக்ரம்” திரைப்படத்தை திரையிட்டு வருகின்றனர். உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனில் 300 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது “விக்ரம்” திரைப்படம்.
இதனிடையே ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான “யானை” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனினும் சமீபத்தில் “யானை” திரைப்படத்தின் விநியோகஸ்தர்கள் “விக்ரம்” திரைப்படம் அமோக வெற்றிப் பெற்றுள்ளதால் திரையரங்குகள் அதிகம் ஒதுக்க முடியாது எனவும் ஆதலால் “யானை” திரைப்படத்தை ஜூலை மாதம் 1 ஆம் தேதி வெளியிட முடிவு எடுக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளரிடம் ஆலோசனை நடத்தினர்.
ஆதலால் தற்போது “யானை” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போய் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விநியோகஸ்தர்கள் ஜூலை மாதம் 1 ஆம் தேதி என ஆலோசித்த நிலையில் அது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆனால் “யானை” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போய் உள்ளது என்பது மட்டும் உறுதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
“யானை” திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, அம்மு அபிராமி, யோகி பாபு, ராதிகா சரத்குமார், குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வருகிற 17 ஆம் தேதி ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் உருவான “வீட்ல விஷேசம்” திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.