HOLLYWOOD
கேன்ஸ் திரைப்பட விழாவில் அரை நிர்வாணத்தில் நுழைந்த பெண்..
“கேன்ஸ்” திரைப்பட விழாவில் அரை நிர்வாணத்துடன் ஒரு பெண் நுழைந்ததில் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து திரைத் துறையை சேர்ந்த பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பிரபலங்கள் ஆகியோர் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக், மாதவன், ஏ. ஆர். ரகுமான், தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே போன்றோர் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு பெண் அரை நிர்வாணத்துடன் சிகப்பு கம்பளத்தில் ஓடி வந்துள்ளார். அவரது மார்பக பகுதியிலும் வயிற்றுப் பகுதியிலும் “Stop raping us” (எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள்) என பெயிண்டால் வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது.
மேலும் அவரது உடம்பில் உக்ரைன் நாட்டின் கொடியும் வரையப்பட்டிருந்தது. அங்கிருந்தவர்கள் அப்பெண் சிகப்பு கம்பளம் இருக்கும் பகுதியில் ஓடி வந்து தனது ஆடைகளை கிழித்து எறிந்தார், அப்போது தான் அவரது உடலில் வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது என கூறுகின்றனர்.
இவ்வாறான நிலையில் இருந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் தங்களது கோட்களால் அவர் உடலை மூடி மறைத்து அவரை காவலர்கள் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.
கடந்த சில மாதங்களாக ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வருவது உலகத்திற்கே தெரிந்த விஷயம். ஆனாலும் உக்ரைன் பெண்களை ரஷ்ய ராணுவம் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதாக பல தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு பெண் அரை நிர்வாணத்தில் ஓடி வந்த செய்தி உலகத்தையே அதிர வைத்துள்ளது.