TELEVISION
சித்ராவின் கணவர் ஹேமந்த் மீது நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு..?
VJ சித்ராவின் கணவர் ஹேமந்த் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த VJ சித்ரா, கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரு ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து சித்ராவின் மரணம் குறித்த விசாரணையை போலீஸார் தொடங்கினர். இவ்வழக்கில் சித்ராவின் பெற்றோர் சித்ராவின் மரணத்திற்கு காரணம் சித்ராவின் கணவர் ஹேமந்த் தான் என புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைதான சித்ராவின் கணவர் ஹேமந்த் அதன் பின் ஜாமீனில் வெளிவந்தார்.
ஜாமீனில் வெளிவந்த அவர், சித்ரா மரணத்தில் முன்னாள் அமைச்சருக்கும், முன்னாள் எம். எல். ஏ. ஒருவருக்கும், மாஃபியா கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என கூறி பீதியை கிளப்பினார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனிடையே ஹேமந்துக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யுமாறு ஹேமந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது சம்பந்தமான வழக்கு சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இறுதி கட்ட விசாரணை நடந்தது. இதில் சித்ராவின் தந்தை தரப்பில் ஹேமந்த் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கூடாது என வாதிக்கப்பட்டதாம். அதே போல் ஹேமந்த் தரப்பில் சித்ராவின் மரணத்திற்கும் ஹேமந்திற்கும் தொடர்பில்லை எனவும் வாதிக்கப்பட்டதாம்.
இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஹேமந்த் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கூடாது என தீர்ப்பளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
