CINEMA
விஜய் சேதுபதியின் “மாமனிதன்” ரிலீஸுக்கு ரெடி..
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய “மாமனிதன்” திரைப்படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?
“தர்ம துரை” திரைப்படத்தின் வெற்றிக்கு பின் சீனு ராமாசமி-விஜய் சேதுபதி இணையும் திரைப்படம் “மாமனிதன்”. இத்திரைப்படத்தின் பணிகள் 2017 ஆம் ஆண்டே தொடங்கி விட்டன. கொரோனா போன்ற சில காரணங்களால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.
குறிப்பாக இத்திரைப்படத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், இத்திரைப்படத்திற்கு இளையராஜா-யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். ஆதலால் இத்திரைப்படத்திற்கு எக்ஸ்பெக்டேஷன் எகிறியது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது வருகிற ஜூன் மாதம் 23 ஆம் தேதி “மாமனிதன்” திரைப்படம் வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.
சீனு ராமசாமியின் திரைப்படங்கள் எளிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவை. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படம் நம்மால் மறக்க முடியாத ஒன்று. இத்திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.
அதனை தொடர்ந்து “நீர் பறவை”, “தர்ம துரை”, கண்ணே கலைமானே” போன்ற திரைப்படங்களையும் இயக்கினார். இதனிடையே விஜய் சேதுபதி, விஷ்ணு ஆகியோரை வைத்து “இடம் பொருள் ஏவல்” என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அத்திரைப்படம் சில காரணங்களால் வெளிவரவில்லை. எனினும் அத்திரைப்படத்தின் பாடல்கள் வெகுவாக ரசிக்கப்பட்டன.
இத்திரைப்படங்களை தொடர்ந்து தற்போது “மாமனிதன்” திரைப்படம் வெளியாகவுள்ளது. சீனு ராமசாமி திரைப்படங்களுக்கும் ரசிகர் கூட்டம் உண்டு. அதுவும் “மாமனிதன்” ரிலீஸுக்காக பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது இப்படம் ஜூன் 23 ஆம் தேதி வெளிவரவுள்ளது.