CINEMA
மண்ணை கவ்விய விஜய் தேவரகொண்டாவின் “லைகர்”… இப்படி ஆகிப்போச்சே??
விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பேன் இந்திய திரைப்படமாக வெளிவந்த “லைகர்” திரைப்படம் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தேவரகொண்டா நடித்த “லைகர்” திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி பேன் இந்திய திரைப்படமாக 5 மொழிகளில் வெளியானது. இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது. “லைகர்” திரைப்படத்தை பார்த்தவர்கள் ‘படத்தில் ஒன்றுமே இல்லை” என நெகட்டிவாகவே விமர்சித்து வந்தனர்.
இதனிடையே “லைகர்” திரைப்படத்தின் முதல் நாளில் உலகளவில் இத்திரைப்படம் ரூ.33.12 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆனால் இரண்டாவது நாளில் 16 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. இது பெரும் சரிவு என தெரிய வருகிறது. கிட்டதட்ட 50 சதவீதம் வசூல் குறைவு என செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் இத்திரைப்படம் வணிக ரீதியாக அதள பாதாளத்திற்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
“லைகர்” திரைப்படத்திற்கு மக்களிடையே பெருவாரியான எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அளவுக்கு புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பாக்ஸிங் திரைப்படம் என்பதால் மக்கள் ஆவலோடு இத்திரைப்படத்திற்காக காத்திருந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என தெரிய வருகிறது.
குறிப்பாக இத்திரைப்படத்தில் மைக் டைசன் நடித்திருந்தார். ஆனால் அவருக்கான பங்கு மிகவும் குறைவாக இருந்தது. மேலும் அவரின் கதாப்பாத்திரத்தை சரியாக பயன்படுத்தவும் இல்லை என விமர்சனங்கள் எழுந்தது.
இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக இல்லை. ஆதலால் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் பெரும் சோதனையாக அமைந்தது. விஜய் தேவரகொண்டா திக்கு வாய் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் திரைப்படத்தில் தேவையில்லாத இடத்தில் வரும் பாடல்கள் பார்வையாளர்களை “உச்” கொட்டவைத்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் வணிக ரீதியாக பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிகிறது.