CINEMA
பாரதிராஜாவின் உடல் நிலை எப்படி இருக்கிறது..? வைரமுத்து சொன்ன அப்டேட்!!
பாரதிராஜாவை மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்த வைரமுத்து அவரின் உடல் நிலை குறித்து பேட்டியளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிராஜா மதுரை விமான நிலையத்தில் மயக்கம் போட்டு விழுந்ததாக செய்திகள் தெரிவித்தன. இதனை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாரதி ராஜாவை பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்து உடல் நலத்தை குறித்து விசாரித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து “பாரதிராஜா நலமாக உள்ளார். மருத்துவர்கள் அவருக்கு நல்ல சிகிச்சையை அளித்து வருகிறார்கள். பயப்பட தேவையில்லை. அவருக்கு நெஞ்சில் சளி இருக்கிறது. விரைவில் அது சரிசெய்யப்படும் என மருத்துவர்கள் கூறினார்கள். அவர் விரைவில் வீடு திரும்புவார்” என கூறினார்.
தமிழ் சினிமாவில் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு விதை போட்டவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் இயக்கிய முதல் திரைப்படமான “16 வயதினிலே” மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதன் பின் “கல்லுக்குள் ஈரம்”, “மண் வாசனை”, “புது நெல்லு புது நாத்து”, “பசும்பொன்”, “கிழக்குச் சீமையிலே”, “கருத்தம்மா” என கிராமத்தை மையமாக வைத்து பல திரைப்படங்களை இயக்கினார்.
கிராமத்து ஸ்டைல் மட்டுமல்லாது “டிக் டிக் டிக்”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற த்ரில்லர் படங்களையும் இயக்கி வெற்றிகண்டார். பாரதிராஜா சிறந்த இயக்குனர் மட்டுமல்லாது சிறந்த நடிகரும் கூட. “ஆய்த எழுத்து”, “பாண்டிய நாடு” “ரெட்டை சுழி” போன்ற திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளிவந்த “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.