CINEMA
“எல்லாரும் சமம் ன்னா, யார் சார் ராஜா?” உதயநிதி படத்தின் புது டிரைலர்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவர இருக்கும் “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தின் சுவாரஸ்யமூட்டும் டிரைலர் வெளிவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் “ஆர்டிகிள் 15”. இத்திரைப்படம் ஜாதிய கொடுமைகளையும் சமூக ஏற்றத்தாழ்வையும் சாடி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
இத்திரைப்படம் வெளியான போது தமிழில் இத்திரைப்படத்தை ரீமேக் செய்வதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்தன. அதன் தொடர்சியாக இத்திரைப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் ரீமேக் செய்யப்போவதாக தகவல் வந்தது.
இதனைத் தொடர்ந்து “கனா” திரைப்படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜா இத்திரைப்படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு “நெஞ்சுக்கு நீதி” என்ற டைட்டிலும் வைக்கப்பட்டது.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்து பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இத்திரைபடத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது.
இதில் உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இரண்டு பெண்கள் மரத்தில் தூக்கிட்டு தொங்கியபடி இருக்கிறார்கள். அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக உதயநிதி ஸ்டாலின் மிளிர்கிறார். பத்திரிக்கையாளர்கள் “தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்குமா?” என கேட்கிறார்கள்.
“எல்லாரும் சமம் ன்னா யார் சார் ராஜா?” என்ற கேள்வி படம் முழுவதும் வந்துகொண்டிருக்கிறது. சமூக சீர்த்திருத்த வசனங்கள் அதிகமாக இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பதாக அறியப்படுகிறது.
“நெஞ்சுக்கு நீதி” என்ற டைட்டில் முன்னாள் முதல்வர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் பெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். ஆரி, மயில்சாமி, சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், ரமேஷ் திலக், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு திபு நினன் தாம்ஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் வருகிற மே 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.