CINEMA
“கமல்ஹாசனை யாராலயும் பயமுறுத்த முடியாது”.. உதயநிதி புகழாரம்
கமல்ஹாசனை யாராலும் பயமுறுத்த முடியாது என உதயநிதி ஸ்டாலின் “விக்ரம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார். ஏன் தெரியுமா?
கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் உருவான “விக்ரம்”திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச் நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் சேதுபதி, சூர்யா, உதயநிதி ஸ்டாலின், பா.ரஞ்சித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் லோகேஷ் கனகராஜ் பேசிய போது சூர்யா இத்திரைப்படத்தில் நடித்துள்ளார் என சர்ப்ரைஸை உடைத்து விட்டார். அதனை தொடர்ந்து “விக்ரம்” திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் சார்பாக வெளியிடும் உதயநிதி ஸ்டாலின், இத்திரைப்படத்தை குறித்து பேசினார்.
அப்போது அவர் “நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். கமல்ஹாசனை மிரட்டி தான் இத்திரைப்படத்தை நீங்கள் வாங்கி வெளியிடுகிறீர்கள் என்று. ஆனால் அது உண்மையல்ல. கமல்ஹாசனை யாராலும் மிரட்ட முடியாது, அவர் யாருக்கும் பயப்படமாட்டார்” என கூறியுள்ளார்.
ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பான உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் சமீபத்தில் பல திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர்களை மிரட்டி படத்தை வாங்கி வெளியிடுகிறார் என குற்றச்சாட்டு பரப்பப்பட்டது. இது குறித்து பல பேட்டிகளில் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அவரும் பல முறை “இது உண்மையல்ல” என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து “விக்ரம்” திரைப்படத்தையும் தயாரிப்பாளர் கமல்ஹாசனை மிரட்டி தான் இத்திரைப்படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார் என ஆங்காங்கே புரளிகள் கிளம்பின. இந்நிலையில் தான் நேற்று “விக்ரம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கமலை யாரும் மிரட்டமுடியாது என கூறி அப்புரளிக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் உதயநிதி.