CINEMA
தமிழ் ராக்கர்ஸ் டிரைலரை வெளியிட்ட பைரசி இணையத்தளம்.. இணையத்தில் சர்ச்சை
“தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரீஸின் டிரைலரை பைரசி இணையத்தளமே வெளியிட்டது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
அருண் விஜய் நடிப்பில் உருவான “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரீஸின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் தமிழ் ராக்கர்ஸ் யார்? என்பதை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் வருகிறார் என தெரிய வருகிறது.
இதில் அருண் விஜய்யுடன், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், ஜி மாரிமுத்து ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரீஸை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ வி எம் புரொடக்சன்ஸ் சார்பாக அருணா குகன், அபர்ணா குகன் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஏ வி எம் தயாரிக்கும் முதல் வெப் சீரீஸ் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வெப் சீரீஸை அறிவழகன் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன் “ஈரம்”, “வல்லினம்”, “ஆறாது சினம்”, “குற்றம் 23” ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். விகாஸ் படிசா “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரீஸிற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரீஸின் டிரைலரை ஒரு பைரசி இணையத்தளமே வெளியிட்டுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
“தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரீஸின் கதையே பிரபல பைரசி இணையத்தளமான தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிப்பது தான். பல வருடங்களாக தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் திரைப்படங்கள் வெளியாவதற்கு முந்திய நாளே நல்ல தரமான பிரிண்ட்டுகளை வெளியிட்டு வந்தன. இது திரைத்துறையினரையே வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தற்போது பைரசிகளை எதிர்த்து எடுக்கப்பட்ட “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரீஸின் டிரைலரே ஒரு பைரசி இணையத்தளத்தில் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
