CINEMA
ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா… மாஸ் அப்டேட்
நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 15 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார். அனிரூத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
“ஜெயிலர்” திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இணைந்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது. அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் ரஜினியுடன் பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக யார் நடிக்க உள்ளார் என்பது குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த தகவல் ஒன்று வெளிவந்தது. அதாவது “ஜெயிலர்” திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகி குறித்தான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
“ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமன்னா தமிழ், தெலுங்கு என பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் ரஜினியுடன் இதுவரை ஜோடி சேர்ந்ததில்லை. இந்த நிலையில் தற்போது ரஜினியுடன் தமன்னா “ஜெயிலர்” திரைப்படத்தில் ஜோடி சேர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
“ஜெயிலர்” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சிறைச்சாலையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் என அறியப்படுகிறது. இதற்கு முன் நெல்சன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். “டாக்டர்” திரைப்படத்தை பலரும் ரசித்ததால் அதே எதிர்பார்ப்போடு “பீஸ்ட்” திரைப்படத்திற்கு போனார்கள். ஆனால் ரசிகர்களுக்கு அத்திரைப்படம் திருப்தி அளிக்கவில்லை. எனினும் “ஜெயிலர்” திரைப்படம் சிறப்பான ஒன்றாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.