TELEVISION
“சிம்பு என்னை மன்னித்து விடுங்கள், நீங்கள் எனக்கு அண்ணன் மாதிரி”.. ஸ்ரீநிதி பகிரங்கம்
சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சிம்புவிடம் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சில மாதங்களுக்கு முன் சிம்புவை காதலித்து வருவதாக கூறி வந்தார். அதன் பின் சிம்புவின் வீட்டிற்கு முன் தர்ணா போராட்டம் நடத்தியதாகவும் செய்திகள் தெரிவித்தன.
மேலும் பல சின்னத்திரை நடிகர்களை குறித்து சர்ச்சையான கருத்துக்களையும் வெளியிட்டு வந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு போதை பழக்கம் இருந்ததாக அவருக்கு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல யூட்யூப் சேன்னலுக்கு பேட்டி அளித்த ஸ்ரீநிதி “நான் முன்பு ஒரு குழப்பத்தில் இருந்தேன். நான் நன்றாக நடனமாடுவேன், பாட்டு பாடுவேன், பாடல் எழுதுவேன். சிம்புவும் அதே போல் தான். அதனால் அவரும் என்னை போலவே இருக்கிறார் என நினைத்து அவர் என்னை காதலிப்பதாக ஒரு பிரம்மையில் இருந்தேன். தற்போது நான் தெளிவடைந்து விட்டேன்” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “சிம்புவை நான் அதிகம் காயப்படுத்திவிட்டேன். சிம்புவிடம் இந்த பேட்டி மூலமாக நான் மன்னிப்பு கேட்கிறேன். அவர் எனக்கு ஒரு அண்ணன் மாதிரி” என கூறினார்.
மேலும் அவர் “நான் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக என்னை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார்கள். ஆனால் நான் அடிமையாகவில்லை. போதை பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்தேன். அவ்வளவு தான். நான் உடல் பருமனாக இருந்தேன். அதனால் எனது நண்பர்கள் என்னிடம் போதை பொருள் எடுத்துக்கொண்டால் உடல் எடை குறைந்துவிடும் என கூறினர். அதனால் தான் போதை பொருள் எடுத்துக் கொண்டேன்” என கூறியது பார்வையாளர்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
ஸ்ரீநிதி அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் மீண்டு வரவேண்டும் என ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
