CINEMA
ஆயிரம் கோவில் கட்டுவதை விட… சூரியின் பேச்சால் எழுந்த சர்ச்சை
“விருமன்” திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் சூரியின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கார்த்தி நடிப்பில் உருவான “விருமன்” திரைப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகி உள்ளார். மேலும் இவர்களுடன் சூரி, ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன் என பலரும் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். “விருமன்” திரைப்படத்தை 2D என்டெர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா தயாரித்துள்ளார். இந்நிலையில் “விருமன்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது. அவ்விழாவில் சூர்யா, கார்த்தி, பாரதிராஜா, சூரி, இயக்குனர் ஷங்கர், அதிதி ஷங்கர் என பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய சூரி “மதுரை மக்கள் சார்பாகவும் எனது ரசிகர்கள் சார்பாகவும் சூர்யாவிற்கு தேசிய விருது கிடைத்ததற்கு மனமாற வாழ்த்துகள்” என கூறினார்.
மேலும் பேசிய சூரி “உங்களது அயராத உழைப்பிற்கு தான் இந்த விருது உங்களுக்கு கிடைத்துள்ளது. நீங்கள் சினிமாவில் போடும் உழைப்பை தாண்டி ஏழை மக்களுக்கு நீங்கள் படிக்க உதவி செய்கிறீர்கள். அதை விட பெரிய விஷயம் எதுவும் கிடையாது”.
“ஆயிரம் கோவில்களை கட்டுவதை விட, ஆயிரம் அன்ன சத்திரம் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது என்பது ஆயிரம் ஜென்மத்துக்கும் பேசப்படும்” எனவும் கூறினார்.
“விருமன்” திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. “விருமன்” திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது இத்திரைப்படம் அதிரடியான ஆக்சன் திரைப்படமாக உருவாகி உள்ளதாக தெரிகிறது. கார்த்தி வெறித்தனமாக இருக்கிறார். அதிதி ஷங்கர் கிராமத்து பெண்ணாக மிகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளார். கியூட்டாக வந்து உள்ளங்களை கொள்ளை கொள்கிறார். ஒரு பக்கா கமெர்சியல் படமாக இத்திரைப்படம் நம்மை ரசிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.