CINEMA
பாலிவுட்டில் கலக்கப்போகுது சூரரை போற்று.. படக்குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..யார் நடிகர் தெரியுமா?
சூர்யா நடித்து தமிழில் வெளியாகி சக்கை போடு போட்ட “சூரரை போற்று” திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இதில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். மேலும் கருணாஸ், ஊர்வசி, காளி வெங்கட், விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஜீ. ஆர். கோபிநாத் எழுதிய தன் வரலாறான “ஏ டெக்கான் ஒடிசி” புத்தகத்தை தழுவி எடுத்ததே சூரரை போற்று. இத்திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா. இவர் இதற்கு முன் “துரோகி” “இறுதிச் சுற்று” போன்ற வெற்றி படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை 2D நிறுவனம் சார்பாக நடிகர் சூர்யாவே தயாரித்திருந்தார்.
கொரோனா பரவல் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியிட்டிருந்தாலும் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் சூரரை போற்று ஒரு முக்கிய இடம் பிடித்தது நமக்கு தெரிந்திருக்கும். மேலும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த திரைப்படமும் ஆகும்.
இந்நிலையில் இத்திரைப்படம் ஹிந்திக்கு செல்கிறது. சூரரை போற்று திரைப்படத்தை தயாரித்த 2D நிறுவனமே இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. அதே போல் சுதா கொங்கராவே இத்திரைப்படத்தையும் இயக்கவுள்ளார். 2D நிறுவனத்திற்கு இத்திரைப்படம் ஹிந்தியில் தயாரிக்கவிருக்கும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரரை போற்று ஹிந்தி ரீமேக்கில் கதாநாயகனாக அக்சய் குமார் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இத்திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
அக்சய் குமார் நிஜ வாழ்வை தழுவி எடுத்த பல திரைப்படங்களில் நடித்துள்ளார். “பேட் மேன்” “கேசரி” “மிஷன் மங்கல்” “ஏர் லிஃப்ட்” போன்ற திரைப்படங்களை தொடர்ந்து ஜீ.ஆர்.கோபிநாத்தின் தன் வரலாற்றை தழுவிய இத்திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
