CINEMA
“நான் முரட்டு சிங்கிளாகவே இருந்துக்குறேன்”.. எஸ் ஜே சூர்யா விளக்கம்
எஸ் ஜே சூர்யாவுக்கு திருமணம் என செய்திகள் பரவி வந்த நிலையில் அது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
எஸ் ஜே சூர்யா தமிழின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர். அஜித், விஜய் என இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து “வாலி”, “குஷி” என இரண்டு மாபெரும் வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா. அதனை தொடர்ந்து “நியூ”, “அன்பே ஆருயிரே” போன்ற திரைப்படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார்.
அதன் பின் பெரும்பாலும் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். வெகு காலம் கழித்து “இசை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தார். அதன் பின் “மெர்சல்” திரைப்படம் மூலம் மாஸ் வில்லனாக களம் இறங்கினார். இதனை தொடர்ந்து “மாநாடு”, “டான்” போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்தார்.
எஸ் ஜே சூர்யா நடிப்பில் சமீபத்தில் “கடமையை செய்” என்ற திரைப்படம் வெளிவந்தது. தற்போது “உயர்ந்த மனிதன்”, “RC 15” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
எஸ் ஜே சூர்யாவிற்கு தற்போது வயது 54. இந்த நிலையில் சமீப நாட்களாக எஸ் ஜே சூர்யா திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அவரது வீட்டார் அவருக்கு பெண் பார்த்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இதனை தொடர்ந்து சமீபத்தில் எஸ் ஜே சூர்யா தனது திருமணத்தை குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது “எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக வெளிவரும் செய்திகள் எதுவும் உண்மை இல்லை. திருமணம் பற்றி நான் சிந்திக்கவே இல்லை. அதற்கான நேரமும் இல்லை. எனது முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கிறது” என கூறியுள்ளார். இதன் மூலம் எஸ் ஜே சூர்யா திருமணம் குறித்து பரவிய செய்திகள் அனைத்தும் பொய் என தெரியவருகிறது.