CINEMA
எஸ். ஜே. சூர்யாவின் வித்தியாசமான “பொம்மை” டிரைலர்..
எஸ். ஜே. சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் “பொம்மை” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
எஸ். ஜே. சூர்யா தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் இயக்குனராக திரையுலகத்திற்கு அறிமுகமானாலும் அவரின் நடிப்புத் திறன் அவரை வேற லெவலில் கொண்டு சென்று விட்டது. ஹீரோவாக மட்டும் அல்லாமல் வில்லன் ரோலில் அதை விட மாஸாக நடிக்கக் கூடியவர்.
“மெர்சல்” திரைப்படத்தில் Terror வில்லனாக மாஸ் காட்டிய அவர், அதன் பின் “ஸ்பைடர்” திரைப்படத்தில் சைக்கோவாக நடித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். “நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படத்தை பற்றி நாம் கூற வேண்டிய அவசியமே இல்லை. நெகட்டிவ் ரோலில் மிரட்டி எடுத்திருப்பார்.
சமீபத்தில் கூட “டான்” திரைப்படத்தில் கச்சிதமாக நடித்து பார்வையாளர்களை “ஓ” போட வைத்தார். இந்நிலையில் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் உருவான “பொம்மை” திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் ஷாப்பிங் மால்களில் Mannequin வகையான பொம்மைகளை உருவாக்கி விற்கும் கதாப்பாத்திரத்தில் எஸ். ஜே. சூர்யா நடித்திருப்பதாக தெரிகிறது. இதில் ஒரு பொம்மையுடன் காதல் கொள்வதாகவும் அந்த பொம்மையின் நன்மைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு இறங்கும் கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார் என டிரைலரை பார்க்கும் போது தெரிகிறது.
இதில் எஸ். ஜே. சூர்யா காதலிக்கும் பொம்மையாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் ஒரு ரொமான்டிக் த்ரில்லர் வகையரா திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது. வழக்கம்போல் எஸ் ஜே சூர்யா நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
“பொம்மை” திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இவர் “அழகிய தீயே”, “மொழி”, “அபியும் நானும்”, “பயணம்” ஆகிய பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
