REVIEW
சீதா ராமம்.. ஒரு அழகிய கவிதை…A Short Review
ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிர்ணால் தாக்கூர் ஆகியோரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ள “சீதா ராமம்” திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனாவிற்கு, அவரது தாத்தா ஒரு டாஸ்க் தருகிறார். இருபது வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் எழுதிய காதல் கடிதங்களை மிர்ணால் தாக்கூரிடம் ஒப்படைக்குமாறு சொல்லிவிட்டு இறந்து விடுகிறார். இதனை தொடர்ந்து மிர்ணால் தாக்கூரை ராஷ்மிகா மந்தனா அந்த கடிதங்களை கொடுக்க தேடிப் போகிறார்.
இந்த டாஸ்க்கால் ராஷ்மிகா மந்தனாவிற்கு சுய லாபமும் ஒன்று இருப்பது தெரிய வருகிறது. இறுதியில் ராஷ்மிகா மந்தனா அந்த கடிதங்களை மிர்ணாலிடம் கொடுத்தாரா? இல்லையா? என்பதே கதை.
காஷ்மீரின் அழகை தனது கேமரா மூலம் ஜில்லென படம் பிடித்த ஒளிப்பதிவாளர்கள் பி எஸ் வினோத், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோருக்கு பெரிய பாராட்டுகளை கூறவேண்டும் என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியையும் கண்குளிரும்படி செதுக்கியிருக்கிறார்.
ராணுவ வீரனாக வரும் துல்கர் சல்மானுக்கும், மிர்ணால் தாக்கூருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் இருவரும் அபாரமாக ஜொலிக்கின்றனர். ராஷ்மிகா மந்தனாவிற்கு இது ஒரு திருப்புமுனையான திரைப்படமாக இருக்கும் என நம்பலாம். இதற்கு முன் ராஷ்மிகா மந்தனா நடித்த கதாப்பாத்திரங்களை விட மிகவும் கனமான கதாப்பாத்திரமாக இத்திரைப்படத்தில் அமைந்துள்ளது. ஆனாலும் அதனை கச்சிதமாக செய்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
திரைப்படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், சுமந்த், தருண் பாஸ்கர், சச்சின் கெதேகர் என பலரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். விஷால் சந்திரசேகரின் இசை அபாரம். காட்சிகளுக்கு மேலும் அழகு சேர்ப்பது போல் பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார். மேலும் பாடல்கள் டப்பிங் பாடல் போல் தெரியவே இல்லை. அந்த அளவுக்கு மெனக்கெட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
நடிகர்களின் கச்சிதமான நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை என அனைத்துமே படத்தில் பிளஸ்கள் தான். திரைக்கதையில் ஆங்காங்கே இருக்கும் சில தொய்வுகள் மைனஸ் என்று கூறினாலும் மற்ற பிளஸ்கள் அதனை தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது. மொதத்தில் “சீதா ராமம்” ஒரு அழகிய கவிதை.