CINEMA
மீண்டும் காமெடி ரோலில் களமிறங்கும் சந்தானம்… எந்த படத்தில் தெரியுமா?
சமீப காலமாக பல திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமே நடித்து வந்த சந்தானம் தற்போது மீண்டும் காமெடி ரோலில் களமிறங்க உள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு எம் ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “பாஸ் என்கிற பாஸ்கரன்”. இத்திரைப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் ஆர்யா-சந்தானம் காம்போவை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு இருவரும் சேர்ந்து காமெடியில் கலக்கியிருந்தனர்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து இருவரும் அதே ராஜேஷ் இயக்கத்தில் “வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க” என்ற திரைப்படத்தில் நடித்தனர். அதன் பின் சந்தானம் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். ஆதலால் அவர் தனக்கு வந்த காமெடி ரோல்களை தவிர்த்தே வந்தார்.
இந்த நிலையில் “பாஸ் என்கிற பாஸ்கரன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இத்திரைப்படத்தையும் ராஜேஷ் இயக்குகிறார் எனவும் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார் எனவும் தகவல்கள் வருகின்றன.
இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் சந்தானம் நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. “சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து காமெடி ரோலில் நடிப்பதை தவிர்த்து வருவதால் ஆர்யா-சந்தானம் காம்போவை மீண்டும் பார்ப்போமா?” என பலரும் ஏக்கத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் சந்தானம் “பாஸ் என்கிற பாஸ்கரன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் காமெடி ரோலில் நடிக்க தயாராக இருப்பதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதால் விரைவில் இத்திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.