CINEMA
போராளியாக சாய் பல்லவி; அசத்தல் டிரைலர்..
சாய் பல்லவி நக்சல் போராளியாக நடித்த “விராட பருவம்” திரைப்படத்தின் அசத்தல் டிரைலர் வெளிவந்துள்ளது.
“பிரேமம்” திரைப்படத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் சாய் பல்லவி. இவர் நடிகை மட்டுமல்லாது சிறப்பாக நடனம் ஆடுபவரும் கூட. உலகமெங்கும் ஹிட் அடித்த “ரவுடி பேபி” பாடலில் இவர் ஆடிய வெறித்தனமான ஆட்டத்தை நாம் மறந்திருக்க முடியாது.
இவர் தற்போது “கார்கி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பின் கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
ராணா ஹீரோவாக நடித்து வந்த “விராட பருவம்” திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்து வந்தார். இத்திரைப்படத்தின் போஸ்டரும் டீசரும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது.
1990களில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு நக்சல் போராளிக்கும் சாதாரண ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் காதல் தான் இத்திரைப்படத்தின் மையக் கரு என தெரியவருகிறது.
சாய் பல்லவி நக்சல் ஊடுருவும் கிராமத்தில் இருக்கிறார். அங்கே போலீஸார்கள் எப்போதும் குவிந்து கிடக்கிறார்கள். சாய் பல்லவிக்கு ஒரு கவிதை புத்தகம் கிடைக்கிறது. அந்த கவிதை புத்தகம் பிடித்து போக, இதை எழுதியவர் யார் என்ற தேடலில் சாய் பல்லவி செல்கிறார். அந்த தேடல் அவரை நக்சல் போராளி ராணாவிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.
இத்திரைப்படத்தில் ராணா, சாய் பல்லவி உட்பட பிரியாமணி, நிவேதா பெத்துராஜ், நந்திதா தாஸ், நவீன் சந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். வேணு உடுகுலா இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். சுரேஷ் பொப்பிளி இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். தனி சாலோ மற்றும் திவாகர் மணி ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
“விராட பருவம்” திரைப்படம் வருகிற ஜூன் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.