CINEMA
ஓடிடியில் வெளியாகிறது RRR…
பாகுபலி இயக்குனர் ராஜமௌளி இயக்கிய “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாது உலகளவில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த திரைப்படம் RRR. இத்திரைப்படத்தை “பாகுபலி” இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ளார். பாகுபலி கொடுத்த உற்சாகத்தில் இருந்து இன்னும் மீளாத ரசிகர்கள் “RRR” திரைப்படத்தையும் அதே வெறியோடு கொண்டாடினர்.
நடிகர்களான ராம் சரணும் ஜூனியர் என்.டி.ஆர்.-ம் தெலுங்கு சினிமாவின் மாஸ் ஆடியன்ஸுக்கு சொந்தக்காரர்கள். இந்நிலையில் இருவருமே கதாநாயகர்களாக இத்திரைப்படத்தில் நடித்ததால் ரசிகர் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய பாகங்கள் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியானதால் தேசிய அளவில் பாகுபலி திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து “RRR” திரைப்படமும் அதே போல் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியானது.
“RRR” திரைப்படம் வெளியான நாள் முதல் இன்று வரை பாக்ஸ் ஆஃபிஸில் உலகளவில் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்திய அளவில் பல இயக்குனர்களும் சினிமா விமர்சகர்களும் திரைப்படத்தின் பிரம்மாண்டத்தையும் உருவாக்கத்தையும் புகழ்ந்து இணையத்தில் எழுதி வந்தனர்.
இந்நிலையில் “RRR” திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதாவது “ஜீ5” நிறுவனம் இத்திரைப்பத்தை வாங்கியுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஜீ5 –ல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மட்டுமே வெளியாகிறது.
“RRR” திரைப்படம் வருகிற மே 20 ஆம் தேதி “ஜீ 5” ஓடிடி தளத்தில் வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தை ஓடிடியில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
