REVIEW
“அம்மா Pregnant ஆ இருக்காங்களா,அய்யோ?” வீட்ல விசேஷம், A short review…
ஆர் ஜே பாலாஜி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் “வீட்ல விசேஷம்” திரைப்படம் எப்படி இருக்கு?
ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோரின் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் திரைப்படம் “வீட்ல விசேஷம்”. இத்திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த “பதாய் ஹோ” திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
ஆர் ஜே பாலாஜியே கல்யாண வயதை அடைந்திருக்கும் நிலையில் அவருடைய அம்மாவான 50 வயதான ஊர்வசி கர்ப்பம் ஆகிறார். இந்த விஷயத்தை ஆர் ஜே பாலாஜி எப்படி கையாள்கிறார்? ஊரே இவர்களை பார்த்து கேலி செய்யும் நிலையில் ஊர்வசி ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுத்தாரா இல்லையா? குடும்பத்தினர் ஊர்வசியை புரிந்து கொள்கிறார்களா? என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கும் திரைப்படம் தான் “வீட்ல விசேஷம்”.
தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு ஒரு புது விதமான சிக்கலான கதையம்சத்தை மிகவும் கலகலப்பாகவும் எந்த வித நெருடலும் இல்லாமல் சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர்கள் ஆர் ஜே பாலாஜியும் என் ஜே சரவணனும்.
ஆர் ஜே பாலாஜியின் அம்மாவாக ஊர்வசியும் அப்பாவாக சத்யராஜும் நடித்திருக்கிறார்கள். அம்மா கர்ப்பமாகி இருக்கிறார் என்பதை சத்யராஜ் தனது மகனான ஆர் ஜே பாலாஜியிடமும் அவரது அம்மாவாக நடித்திருக்கும் மறைந்த நடிகை கே பி ஏ சி லலிதாவிடமும், தனது இளைய மகனிடமும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் போது, சத்யராஜ் தயக்கம் காட்டும் காட்சி அபாரமாக அமைந்துள்ளது.
தான் கர்ப்பமான விஷயத்தை சமூகம் ஏலனமாக பார்க்கும் போதும், ஆனால் தன் கணவனை அப்படி இந்த சமூகம் பார்க்கவில்லை எனும் போதும் தனது வெறுப்பையும் கோபத்தையும் ஊர்வசி இயல்பாக வெளிப்படுத்தும் காட்சியில் சிக்ஸர் அடித்து விடுகிறார்.
மாமியாராக வரும் மறைந்த நடிகை கே பி ஏ சி லலிதாவிற்கு சிறு கதாப்பாத்திரமே என்றாலும், ஒவ்வொரு வாய்ப்பையும் நழுவ விடாமல் கச்சிதமாகவே தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆர் ஜே பாலாஜி நடிப்பு முதல் பாதியில் சுமார் என்றாலும் இரண்டாம் பாதியில் கலக்குகிறார்.
ஆர் ஜே பாலாஜியின் காதலியாக வரும் அபர்ணா பாலமுரளி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கர்ப்பமான அம்மாவின் மன நிலைமையை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர் ஜே பாலாஜிக்கு அட்வைஸ் செய்யும் இடத்தில் மேலும் மிளிர்கிறார். மேலும் குக் வித் கோமாளி புகழ், யோகி பாபு, மயில்சாமி என பலரும் தங்களுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கிரீஷின் இசை காட்சிகளுக்கேற்ப இழையோடுகிறது. கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு அபாரம். செல்வாவின் எடிட்டிங் பக்கா.
மொத்தத்தில் நமது சமூகம் Taboo என்று ஒதிக்கி வைத்திருக்கும் ஒரு கதையை தேர்ந்தெடுத்து நகைச்சுவையாகவும் சென்டிமன்ட்டாகவும் திரைக்கதையை அமைத்து பார்வையாளர்களையும் ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.