CINEMA
கிரிக்கெட் வீரர் கபில் தேவாக நடித்த நடிகருக்கு ஃபிலிம் ஃபேர் விருது..
கிரிக்கெட் வீரர் கபில் தேவாக நடித்த நடிகர், சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றுள்ளார்.
1983 ஆம் ஆண்டு இந்தியா, கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற மகத்தான வரலாற்று சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் “83”. இத்திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது.
இதில் கபில் தேவ் கதாப்பாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார். தமிழக கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த் கதாப்பாத்திரத்தில் கோலிவுட் நடிகர் ஜீவா நடித்திருந்தார். மேலும் இதில் தீபிகா படுகோன், பங்கஜ் திரிபாதி என பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் கபீர் கான் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் 67 ஆவது ஃபிலிம்ஃபேர் விருதுகளில் விருது வென்றவர்கள் குறித்தான ஒரு பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. அதில் “83” திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை கபில் தேவ் கதாப்பாத்திரத்தில் நடித்த ரன்வீர் சிங் வென்றுள்ளார்.
ரன்வீர் சிங் சமீபத்தில் “ஜெயேஷ்பாய் ஜோர்டார்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது “சர்க்கஸ்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த “பத்மாவதி” திரைப்படம் தமிழகத்திலும் பரவலாக அறியப்பட்டது.
ரன்வீர் சிங் சமீபத்தில் “பேப்பர்” என்ற இதழுக்காக ஆடை இல்லாமல் சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் ரன்வீர் சிங் மீது சில வழக்குகளும் பாய்ந்தன. இந்த நிலையில் தற்போது சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றிருக்கிறார் ரன்வீர் சிங்.