CINEMA
“என் வாழ்க்கையில் நிம்மதி சுத்தமாக கிடையாது” ஏக்கத்தில் ரஜினிகாந்த்
வாழ்க்கையில் 10 சதவிகிதம் கூட நிம்மதி கிடையாது என ரஜினிகாந்த் மிகுந்த ஏக்கத்தில் கூறியுள்ளார். ஏன் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாது அவர் தீவிர ஆன்மீகத்தை கடைப்பிடிப்பவர் என்பதும் பலருக்கும் தெரியும். முதலில் சுவாமி ராகவேந்திராவிடம் பக்தி கொண்ட ரஜினிகாந்த் காலப்போக்கில் பாபாஜியின் பக்தராக மாறிப்போனார். ஆதலால் இமயமலைக்கு அடிக்கடி சென்று வருவார்.
இமயமலையில் அவர் சாதாரணமாக நடமாடும் பல புகைப்படங்கள் இருக்கின்றன. அதில் சன்னியாசி போல் சாலையில் நின்றுக் கொண்டு ரஜினிகாந்த் சாப்பிட்டுக்கொண்டிருப்பார். மரத்தின் அடியில் தூங்கிக் கொண்டிருப்பார்.
எப்போதும் தான் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார் என்பதை மனதில் கொள்ளாமல் சாதாரணமாகவே தென்படும் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தின் போது மட்டும் சன்னியாசியாக மாறிவிடுவார். இமயமலையில் பாபா தியானம் செய்த குகையை தரிசிக்கவும் அங்கே தியானம் செய்யவுமே ரஜினி இமயமலைக்கு பயணப்படுவார்.
யோகி பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கை வரலாற்றில் ஆர்வம் கொண்ட ரஜினிகாந்த், அந்த தாக்கத்தால் “பாபா” திரைப்படத்தை உருவாக்கினார். அத்திரைப்படம் கடும் தோல்வியை கண்டாலும் ரஜினியின் விருப்பமான திரைப்படங்களில் “பாபா” திரைப்படமும் ஒன்று.
இந்நிலையில் நேற்று “கிரியா யோகா” குறித்தான ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய ரஜினிகாந்த் கிரியா யோகா குறித்தும், பரமஹம்ச யோகானந்தர் குறித்தும் பேசினார்.
பேச்சின் நடுவே அங்கே மேடையில் அமர்ந்திருந்த சந்நியாசிகளை குறிப்பிட்டு “இவர்களிடம் கடவுள் தோன்றி நிம்மதி வேண்டுமா சந்தோஷம் வேண்டுமா என கேட்டால் இவர்கள் நிம்மதியை தான் தேர்ந்தெடுப்பார்கள். ஏனென்றால் அது தான் நிலையானது” என கூறினார்.
மேலும் பேசிய ரஜினிகாந்த் “நான் பணம், புகழ் எல்லாம் பார்த்துவிட்டேன். நிறைய அரசியல்வாதிகளுடனும் தொழிலதிபர்களுடனும் பழகியிருக்கிறேன். ஆனால் இவர்களிடம் (சந்நியாசி) இருக்கும் நிம்மதி என்னிடம் 10 சதவிகிதம் கூட கிடையாது” என ஏக்கத்துடன் கூறினார். இச்செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.