CINEMA
மாமனிதனை பாராட்டிய மாமனிதன்… படக்குழுவினர் மகிழ்ச்சி
“மாமனிதன்” திரைப்படத்தை பார்த்து விட்டு உச்ச நடிகர் ஒருவர் பாராட்டியுள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “மாமனிதன்”. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம், கே பி ஏ சி லலிதா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
தேனிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆட்டோ ஓட்டி வரும் விஜய் சேதுபதி, மனைவி மற்றும் குழந்தைகளுடன் எளிமையாக வசித்து வருகிறார். ஆனால் தனது குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என விருப்பப்படுகிறார்.
அவ்வேளையில் அந்த கிராமத்திற்கு ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர் வருகிறார். அந்த புரோக்கரை பயன்படுத்தி விஜய் சேதுபதியும் ஒரு புரோக்கர் ஆகிறார். இந்த நிலையில் தன்னுடைய குழந்தைகளை தான் நினைத்தது போல் படிக்க வைத்தாரா இல்லையா? ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆன விஜய் சேதுபதி மாமனிதர் ஆனாரா? என்பதே இத்திரைப்படத்தின் கதை.
“மாமனிதன்” திரைப்படத்திற்கு இதுவரை பாஸிட்ரிவ் ரிவ்யூக்களே வந்த வண்ணம் உள்ளன. குடும்பம் குடும்பமாக சென்று “மாமனிதன்” திரைப்படத்தை பார்த்து வருகின்றனர்.
படம் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் யதார்த்தத்துக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் “மாமனிதன்” திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். அதன் பின் படக்குழுவினரை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இச்செய்தியை “மாமனிதன்” திரைப்படத்தின் விநியோகஸ்தர் ஆர். கே. சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
