CINEMA
ராஜமௌலியின் அடுத்த படத்தின் ஹீரோ மகேஷ் பாபு தான் தெரியுமா?
“பாகுபலி”, “ஆர் ஆர் ஆர்”, போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய ராஜமௌலி, மகேஷ் பாபுவை வைத்து ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் பரவியது. தற்போது இது குறித்து மகேஷ் பாபுவே வாய்விட்டுள்ளார்.
“மகதீரா”, “நான் ஈ”, “பாகுபலி”, “பாகுபலி 2”, “ஆர் ஆர் ஆர்” போன்ற திரைப்படங்களை இயக்கி பேன் இந்திய இயக்குனராக ஆகிப்போனவர் ராஜமௌலி. இவரின் திரைப்படங்களில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது. சாகசங்கள் நிறைந்த சண்டை காட்சிகளும், வியக்க வைக்கும் திருப்பங்களும் ரசிகர்களை உற்சாகப்படுத்துபவை.
சமீபத்தில் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி உலகம் முழுவதிலும் வெறித்தனமான வெற்றியை பெற்றது. ரூ. 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண், ஆலியா பட் ஆகியோர் நடித்திருந்தனர். வியக்கவைக்கும் சண்டைக் காட்சிகளும் விறுவிறுப்பான திரைக்கதையும் பார்வையாளர்களை கட்டிப்போட்டது.
மேலும் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் பல சர்வதேச விருதுகளையும் பெற்றது. குறிப்பாக ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் நிச்சயம் ஆஸ்கார் விருது வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் மகேஷ் பாபு ஒன்றை கூறியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மகேஷ் பாபு “ராஜமௌலியுடன் பணிபுரிவது கனவு நினைவாவது போன்றது. அவர் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடித்தாலே 25 திரைப்படங்களில் நடித்தது போன்றது. அவரது திரைப்படத்தில் உடல் ரீதியாக உழைக்க வேண்டியிருக்கும். இருந்தாலும் அவருடன் பணிபுரிய ஆவலோடு இருக்கிறேன்” என கூறியுள்ளார்.