CINEMA
“எனக்குள்ள பேய் புகுந்த மாதிரி ஆகிடுச்சு”..மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..
இரவின் நிழல் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பார்த்திபன் மைக்கை தூக்கி வீசிய விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் கோலிவுட்டின் தனித்துவமான நடிகர். இவரும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் சேர்ந்தால் போதும், ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பார்கள். இவர் நடிகர் மட்டுமல்லாது பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
குறிப்பாக இவர் இயற்றிய “புதிய பாதை” “ஹவுஸ் ஃபுல்” ஆகிய படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதுகளை பெற்றது. எப்போதுமே புதுமையாகவும் தனித்துவமாகவும் சிந்திக்ககூடிய இவர் சமீபத்தில் எந்த துணை நடிகரும் அல்லாமல் தான் மட்டுமே நடித்த “ஒத்த செருப்பு” என்ற திரைப்படமும் தேசிய விருதை பெற்றது. இத்திரைப்படத்தையும் இவரே இயக்கினார்.
இதனை தொடர்ந்து “இரவின் நிழல்” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இத்திரைப்படத்தை உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளிவரவுள்ளது.
இத்திரைப்படத்தின் “Single” மற்றும் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டார். விழாவில் ஏ.ஆர்.ரகுமானை பேட்டிக்கண்ட போது பார்த்திபன் பேசிக்கொண்டிருந்த மைக் சரியாக வேலை செய்யவில்லை என தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து விழா மேடையின் முன்னால் நின்று மைக்கை தூக்கி வீசினார். அவர் தூக்கி வீசிய மைக் நடிகர் ரோபோ ஷங்கர் மேல் விழுந்ததாக தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து பின்பு விழாவில் பேசிய பார்த்திபன், “நான் ஏ.ஆர்.ரகுமானுக்கு கொடுத்த விருதை தூக்கும்போது கை மிகவும் வலித்தது. அதனால் உடல் சோர்வடைந்து பேச கஷ்டமாக இருந்து. இந்நேரத்தில் மைக்கும் சரியாக வேலை செய்யவில்லை என தெரிந்ததும் கோபம் வந்துவிட்டது. இது அநாகரிக செயல் தான். மன்னித்துவிடுங்கள்” என ரசிகர்களிடம் அப்போதே மன்னிப்பு கேட்டார்.
எனினும் இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஏ. ஆர். ரகுமானுக்கு கொடுத்த விருதை தூக்க முடியாமல் கை ஷாக் அடித்த மாதிரி ஆகின. மேலும் விழா நன்றாக நடக்க வேண்டும் என்ற டென்ஷனும் இருந்தது. அந்த நேரத்தில் மைக் வேலை செய்யவில்லை என்றவுடன் என்னுள் பேய் புகுந்தது போல் ஆகிவிட்டது” என்று கூறியுள்ளார்.