CINEMA
இன்னும் தொடங்கவில்லை.. ஆனால் அதற்குள் விஜய் படத்தை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்
இன்னும் தொடங்கப்படாத விஜய் படத்தை அந்த பிரபல ஓடிடி நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகி பாபு, ஷாம் ஆகிய பலரும் நடித்து வருகின்றனர். எஸ் ஜே சூர்யாவும் நடிப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “வாரசடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடனே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து இத்திரைப்படத்தில் லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இத்திரைப்படத்தில் விஜய் படம் முழுக்க நெகட்டிவ் ரோலில் வருவதாகவும் செய்திகள் தெரிவித்தன. இத்திரைப்படத்தில் 6 வில்லன்கள் என கூறப்படுகிறது. பிரித்விராஜ், சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் சமந்தாவின் பெயரும் அடிபடுகிறது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் “தளபதி 67” திரைப்படத்தின் பூஜை கூட இன்னும் போடாத நிலையில் ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் அத்திரைப்படத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் “தளபதி 67” திரைப்படத்தை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் இத்திரைப்படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் கூட தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் “தளபதி 67” திரைப்படத்தை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளதாக செய்திகள் வருகிறது.