REVIEW
நெஞ்சுக்கு நீதி; ரசிகர்களுக்கு கிடைச்சதா நீதி? A short review
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
மூன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதில் இருவர் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய படி கண்டெடுக்கப்படுகிறார்கள். மற்றொரு பெண்ணை காணவில்லை. அப்பெண் எங்கே? குற்றவாளிகளை கண்டுபிடிப்பாரா விஜய ராஜவன் ஐபிஎஸ் (உதயநிதி) என்பதே இத்திரைப்படத்தின் கதை.
உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு அபாரமாக உள்ளது. போலீஸ் உடையில் சிக்கென்றும் நச்சென்றும் கெத்தாக மிளிர்கிறார். அதுவும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப் போகும் ஒவ்வொரு தருணத்திலும் அந்த திக் திக் நிமடங்களை முக பாவனைகளின் மூலம் நம்மிடமும் கடத்துகிறார். இதற்கு முன் பார்த்திராத ஒரு வித்தியாசமான நடிப்பை உதயநிதி வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.
இயக்குனர் அருண்ராஜா காம்ராஜ் வசனங்கள் அற்புதம். அதுவும் சாதிய கொடுமைகள், தீண்டாமை ஆகியவற்றை பற்றி எந்த வித அச்சமும் இல்லாமல் மனதில் உறைக்கும் படி நச்சென்று அமைந்த வசனங்கள் பளீர். “ஆர்ட்டிகிள் 15” திரைப்படத்தின் ரீமேக் போலவே தெரியவில்லை. நேட்டிவிட்டியில் அசத்தியிருக்கிறார். தமிழகத்தில் நடந்த சில உண்மை நிகழ்வுகளை கோர்த்திருக்கிறார். அதற்காகவே அருண்ராஜா காமராஜ் ஸ்பெஷல் கிளாப்ஸ் வாங்குகிறார்.
சுரேஷ் சக்கரவர்த்தி தனது மிரட்டலான நடிப்பில் மிளிர்கிறார். மிகவும் பிற்போக்குத்தனமான கொடூரமான போலீஸ் கேரக்டருக்கு எடுப்பாக நடித்திருக்கிறார். இளவரசன், அப்துல், மயில்சாமி ஆகியோர் அவரவர்களின் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகியாக வரும் தன்யா சிறப்பாக நடித்திருக்கிறார். ஆரி அர்ஜூனன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
திபு நினன் தாமஸின் பின்னணி இசை காட்சிகளின் ஓட்டத்திற்கேற்ப இழையோடுகிறது. துருத்திக் கொண்டு தெரிவது போல் இல்லாமல் காட்சிகளின் உணர்வுகளோடு ஒட்டி உறவாடுகிறது. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு வேற லெவல். ரூபனின் எடிட்டிங் பக்கா. மொத்தத்தில் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு செருப்படியும் பதிலடியும் தந்து மக்களின் மனசாட்சியை கேள்வி கேட்க வைத்திருக்கிறது “நெஞ்சுக்கு நீதி”.