CINEMA
“நயன்தாரா குழந்தையை காப்பாத்தனும்..” அதுக்காக…..?
நயன்தாரா தன்னுடைய குழந்தைக்காக போராடும் “O2” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நயன்தாராவின் Line up இப்போது படு பிசியாக இருக்கிறது. பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதே போல் மலையாளத்தில் “பிரேமம்” இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் “கோல்டு” திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நயன்தாராவின் வித்தியாசமான கதைக்களம் கொண்ட “O2” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலர் திரைப்படத்தின் மையக் கதையை கூறுவது போல் தான் எடிட் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் இது தான் கதையாக இருக்கும் என எளிதாக வியூகிக்க முடிகிறது.
அதாவது நயன்தாராவின் மகனுக்கு சுவாசப் பிரச்சனை. Oxygen சிலிண்டரோடு தான் நடமாட வேண்டிய சூழ்நிலை. குழந்தையை கொச்சினில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக பேருந்தில் அழைத்து செல்லும் போது நிலச்சரிவு ஏற்பட்டு பேருந்து மண்ணுக்குள் புதைந்து விடுகிறது.
ஒரு பேருந்து காணாமல் போய்விட்டது என்ற தகவலை அறிந்து கொண்ட பின் தனிப்படை அமைத்து அந்த பேருந்தை தேடுகிறார்கள். உள்ளே புதைந்த பேருந்தில் இருக்கும் பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆதலால் நயன்தாராவின் மகனின் ஆக்சிஜனை எப்படியாவது அபகரிக்கலாம் என பார்க்கிறார்கள். இதனை நயன்தாரா தடுத்தாரா? பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேறினரா? என்பதே கதை.
நயன்தாரா டிரைலரில் பேசும் “எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்து ன்னா, பாத்துட்டு சும்மா இருக்க மாட்டா” என்ற வசனத்தின் மூலம் அந்த குழந்தைக்கு இவர்களால் ஆபத்து என்பதை அறிய முடிகிறது.
“O2” திரைப்படத்தை ஜி. எஸ். விக்னேஷ் இயக்கி உள்ளார். விஷால் சந்திரசேகர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ் ஆர் பிரபு ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூன் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.